தன்னம்பிக்கை பெண்

14 June 2010

மனதில் உறுதியும், வாக்கினிலே இனிமையும், நினைவு நல்லதாக இருந்தால் நினைத்தது கைகூடும் என்பதற்கிறணங்க, எட்டு வயதில் ஏற்பட்ட தீ விபத்தில் முகம், கழுத்து கருகி, எதிர்காலமே கேள்விக்குறியாய்! சமுதாயமும், உறவுகளும் ஏளனம் செய்த நிலையில் மனம் தளராமல் படித்து, மிக உயர்ந்த நிலையை அடைந்து, தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பிற மனிதர்களுக்கு சேவை செய்யவதை வாழ்வின் லட்சியமாக கொண்டு வாழ்ந்து வரும் தன்னம்பிக்கை பெண் வேலூடைச் சேர்ந்த டாக்டர் பிரேமா அவர்கள்.

பெங்களூருவில் உள்ள ஜெய்நகர் சொந்த ஊர். சதாரண நடுத்தர குடும்பம்.

* இந்த விபத்து எப்படி ஏற்பட்டது?

ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. பாட இடைவேளையின் போது வீட்டிற்கு வந்தேன். வீட்டில் யாரும் இல்லை. கிச்சனில் நுழைந்து டீ போட 'ஏர் ஸ்டவ்' வை பற்ற வைத்த போது, வெடித்து சிதறியதில் என் முகம், கழுத்து பகுதிகள் கருகி விட்டது. உதடு பகுதி நெஞ்சை தொட்டது, கழுத்து முற்றிலும் இல்லை. உள்ளூர் மருத்துவமனையில் ஒன்றரை மாதம் வைத்தியம் பார்த்த பின், வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தோம். மூன்று முறை மயக்க மருந்து கொடுக்க முயற்சித்தும் முடியவில்லை. என் அப்பா அழுதார். ஆனால் என் அம்மா நம்பிக்கை இழக்காமல் பிரார்த்தனை செய்தார். ''கடவுளே என் மகளை காப்பாற்றிக் கொடுத்தால் இந்த மருத்துவ மனையிலே ஊழியம் பார்க்க வைக்கிறேன்'' என்று. மறுநாளே எனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆப்பரேஷன் செய்தார்கள்.

* உங்கள் முகத்தை எப்போது பார்த்தீர்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

ஒரு வருடத்திற்கு பிறகு பார்த்தேன். அதிர்ந்து போய் இரண்டு நாள் அழுதேன். அப்போது என் அம்மா, ''இதுதான் இனி உன் முகம், உன் அடையாளம், இதனுடன் தான் இனி நீ வாழ வேண்டும், மனதை தேற்றிக் கொள். உருவத்தை நினைத்து வேதனைப்படாதே; நீ சாதிப்பதற்குத்தான் கடவுள் உனக்கு இந்த தோற்றத்தை கொடுத்துள்ளார்,'' என்றார். இரண்டு வருடம் கழித்து மீண்டும் வேலூர் மருத்துவமனையில் 24 பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது.

* திரும்ப எப்போது பள்ளிக்கு சென்றீர்கள்? சக மாணவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது?

நான்கு வருடம் கழித்து பள்ளிக்கு போனேன். திரும்பவும் ஐந்தாம் வகுப்பு படிக்க விருப்பமில்லை. அப்போது என் தோழிகள் எல்லாம் ஒன்பது, பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து படிக்க விருப்பப்பட்டேன் ஆனால் பள்ளியில் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் 13 வயதிலே 18 வயது என்று சர்ட்பிகேட் வாங்கி நேரடியாக 10 வகுப்பு தேர்வு எழுதினேன். எல்லாப்பாடத்திலும் 35, 40 மார்க் வாங்கி பாஸ் செய்தேன். நம்மால் படிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வந்தது. கல்லூரியில் பி.யூ.சி. சேர்ந்தேன். கல்லூரிக்கு செல்லும் போது சக மாணவர்களே பேய், பிசாசு என்று கேலி செய்வார்கள். சிறு குழந்தைகள் பயப்படும். அப்போதெல்லாம் உடைந்து போய் அழுவேன். கல்லூரியில் மாணவிகள் என் அருகில் உட்காரவோ, பேசவோ மாட்டார்கள். அதனால் நான் படிப்பில் முழுக் கவனம் செலுத்தினேன். நல்ல மதிப்பெண் வாங்கியதும் என்னிடம் சந்தேகம் கேட்டு அருகில் வர ஆரம்பித்தனர். இவர்கள் நம்மிடம் நெருங்க வேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி வந்தது. பி.யூ.சி.,யில் யுனிவர்சிட்டி முதல் ரேங்க் பெற்றேன். அதனால் எளிதாக எம்.பி.பி.எஸ்., சீட்டு கிடைத்தது. 1980ல் படித்து முடித்து பின், வேலூர் மருத்துவ கல்லூரியில் எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எல்.பி.எம். ஜோசப்பிடமே பிளாஸ்டிக் சர்ஜன் மாணவியாக சேர்ந்தேன். ஆண்கள் மட்டும் இருந்த துறையில் நான் மூன்றாவது பெண். பின் அங்கேயே 30 வருடமாக ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றினேன். இடையில் இரண்டு வருடம் கிடைத்த விடுமுறையில், பிளாஸ்டிக் சர்ஜன் படிப்பதற்காக அமெரிக்கா சென்றேன். அதில் முதலாவதாக வந்து, பிளாஸ்டிக் சர்ஜன் பவுண்டேசன் அவார்ட் வாங்கிவேன். இது அமெரிக்காவில் இந்திய பெண்ணிற்கு கொடுத்த முதல் விருது. தற்போது, என்னைப் போல் தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே அக்னி ரக்ஷா என்ற அமைப்பை நிறுவி இலவச சிகிச்சை அளித்து வருகிறேன் தற்போது என்னிடம் 1000 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இன்றைய மாணவிகளுக்கு தாங்கள் கூற விரும்புவது?

சந்தோஷம், துன்பம் வாழ்வில் தவிர்க்க முடியாதது. அதனால் மனச்சோர்வு அடையக் கூடாது. தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் இருந்தால் முடியாதது என்று எதுவும் இல்லை என்றார்.


Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP