சின்னத்திரைக்கும் தணிக்கை வேண்டும்

11 July 2011


ஒரு காலத்தில் திரைப்படங்கள் மீது மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதை விட அதிகமான ஈர்ப்பு இப்போது தொலைக்காட்சி தொடர்கள் மீது உள்ளது.

தனியார் தொலைக்காட்சிகளில் காலையில் தொடங்கி இரவு 11 மணி வரைக்கும் இடைவிடாது தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு பெண்களும் இந்தத் தொடர்களில் மெய் மறந்து மூழ்கிவிடுகின்றனர்.

பெரும்பாலான தொடர்களில் ஒரு பெண், மற்றொரு பெண்ணால் (மாமியார், மருமகள், நாத்தனார் உறவுக்குள்) கொடுமைப்படுத்தப்படுவது, தவறான உறவுமுறை ஆகிய கலாசார சீரழிவு மிக்க காட்சிகள் அதிகரித்து வருகின்றன.

பெண் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள சின்னத்திரையில் இது போன்ற காட்சிகளைத் தவிர்க்கலாம். சில நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இது போன்ற காட்சிகளை அரைமணி நேரம் ஒளிபரப்புவதன் மூலம் எபிசோட்டின் எண்ணிக்கையைக் கூட்டுவது அவசியம்தானா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

ஒன்றுக்கும் பயனளிக்காத, நேரத்தையும், மின்சாரத்தையும் விரயமாக்கும் இத்தகைய தொடர்களில் பெண்கள் மூழ்கிப் போவதன் காரணம் என்ன?
 
 பயணம் குறித்த சேனல்கள், இயற்கையை விவரிக்கும் சேனல்கள், செய்தி சேனல்கள் உள்ளிட்ட பயனுள்ள சேனல்களைப் பார்ப்பது மிகவும் குறைவு. தன்னால் முடியாத காரியத்தை தொடர் கதாநாயகி திரையில் தோன்றி செய்வதை பெண் ரசிக்கிறாள். அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, மாமியாரை கொடுமைப்படுத்தும் விஷயமாக இருந்தாலும் சரி. அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக தொடர்கள் உள்ளன. சில நேரங்களில் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் முடியாத சூழ்நிலைகளும் எழுகின்றன. இதைப் பார்க்கும்போது, சின்னத்திரைக்கும் தணிக்கை அவசியமானது என்றே தோன்றுகிறது.

பெரும்பாலும் நடைமுறையில் உள்ளதைவிட மிகைப் படுத்திதான் தொடர்களில் சித்தரிக்கிறார்கள். பல இடங்களில் அது மிகைப்படுத்தப்படுகிறது. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், வீட்டில் நிகழும் சண்டை சச்சரவுகள் உள்ளிட்டப் பிரச்னைகளைக் காண்பிக்கும் வேளையில், அதற்கான தீர்வையும் அவர்கள் காண்பிப்பதில்லை. சில நேரங்களில் அது அன்றாட வாழ்க்கைக்கும் பயன்படாமல் பாதகமான முடிவைத் தருகிறது. தினம் ஒரு "சஸ்பென்ஸ்' வைத்து தொடர்களை முடிப்பதால், அதனைத் தொடர்ந்து பார்க்க பெண்களைத் தூண்டுகிறது. இதனால் அன்றாடப் பணிகள் கூட மறந்து போய்விடுகின்றன.


குடும்பக் கதைகளை ஒளிபரப்புவதால், பெண்கள் அந்தத் தொடரின் நாயகியாக தன்னை பாவித்துக் கொள்கிறார்கள். இதனால் தன் வீட்டில் நிகழும் நிகழ்வு போலத் தொடரையும் நேசிக்கத் தொடங்குகிறாள். அது ஒருபுறமிருக்க, பெண்கள் எவ்வாறு தனித்துச் செயல்பட முடியும், போராடி வெற்றி காண்பது, ஆண் துணையில்லாமலே வாழ்க்கையில் வெற்றி போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் செயல்களும் தொடர்களில் காண்பிக்கப்படுகின்றன. அந்த நல்ல காரியங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பல மணி நேரங்கள் அதில் மூழ்கிவிடுவது ஆபத்தானது.



0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP