நம் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தின்மீது ஆசை

12 September 2011



அநேகமாக நாம் எல்லோருமே வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வேலையைச் செய்கிறோம். அதில் என்னதான் சிறப்பாகப் பணிபுரிந்து புரமோஷன், போனஸ், சம்பள உயர்வெல்லாம் வாங்கினாலும் ஒருகட்டத்துக்குமேல் ஏதோ அலுப்புத் தோன்றிவிடுகிறது.
வேலையைச் சுமையாக நினைக்க ஆரம்பித்து விடுகிறோம். நிம்மதியைத் தேடி வேறு கவனஈர்ப்புகளில் விழுகிறோம்.
இந்த சலிப்புக்கு என்ன காரணம்? சிலர் மட்டும் இந்த வலையில் சிக்காமல் என்றென்றும் தங்களுடைய "வேலை'யை, துறையை, வாழ்க்கையை, இந்த உலகத்தையே நேசித்துக் கொண்டிருப்பவர்களாக தெரிகிறார்களே, இந்த மேஜிக் எங்கே, எப்போது, எப்படி நிகழ்கிறது?
தத்துவார்த்தமான இந்த கேள்வியை எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு ப்ராக்டிகல் தீர்வைச் சொல்கிறது. "தி எலிமன்ட்' (The Element) புத்தகம். இதன் ஆசிரியர்கள், டாக்டர் சர் கென் ராபின்சன் மற்றும் லூ ஆரோனிகா.
ஆங்கிலத்தில் "எலிமென்ட்' என்றால் அடிப்படை, அதாவது இது இல்லாவிட்டால் வேறு எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு அத்தியாவசியமான ஆதி அம்சங்கள்!
"அப்படி நம் ஒவ்வொருவருக்கும் ஒரு விஷயத்தின்மீது ஆசை, தீராத காதல், வெறி இருக்கும்' என்கிறார் கென் ராபின்சன். "அந்த எலிமென்ட் எது என்று கண்டறிந்து அங்கே உழைப்பைக் கொட்டினால் சுலபமாக ஜெயிக்கலாம். அதன்மூலம் பணம், புகழ், பதவி, கௌரவம் கிடைப்பதெல்லாம்கூட இரண்டாம்பட்சம்தான். இந்த நிம்மதியும், விரும்பியதைச் செய்கிறோம் என்கிற திருப்தியும் இருக்கிறதே, அவை கோடிகோடியாகக் கொட்டினாலும் கிடைக்காது!'' என்பதுதான் அவர் சொல்வது.அப்படியானால் பணம் சம்பாதிப்பது தப்பா?இல்லை. ஆனால் அதுமட்டுமே உங்கள் பாதையைத் தீர்மானிக்கிற விஷயமாக இருக்கமுடியாது. இருக்கக்கூடாது என்பதுதான் இந்தப் புத்தகம் வலியுறுத்துகிற செய்தி.சரி. என்னுடைய எலிமென்ட் எது? அதை எப்படி அடையாளம் காண்பது?இதற்கு ஒரு மிக எளிமையான வழிமுறை இருக்கிறது. நம்மை நாமே இரண்டு கேள்விகள் கேட்டுக்கொண்டால் போதும். எலிமென்ட் சிக்கிவிடும்1முதலில்,"நான் எதையெல்லாம் செய்வதில் திறமைசாலியாக இருக்கிறேன்?' ஒன்றுவிடாமல் பட்டியல் போடத் தொடங்குங்கள்!இப்போது முதல் பட்டியலை மூடிவைத்துவிட்டு அடுத்த கேள்வி, "நான் எதையெல்லாம் செய்ய விரும்புகிறேன்?' இன்னொரு பட்டியல் போடுங்கள்!ஆக, முதல் பட்டியல் திறமை, இரண்டாவது ஆர்வம். இந்த இரண்டிலும் இடம் பெறுகிற விஷயங்களைத் தொகுத்துப்பார்த்தால், எலிமென்ட்! "நீங்கள் இளைஞராக இருந்தால் உங்களது திறமையும் ஆர்வமும் ஒருங்கிணைகிற அந்தப்புள்ளியை, உங்களது எலிமென்ட் எது என்பதைச் சீக்கிரம் அடையாளம் காணுங்கள். அதைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான வழிகளை யோசியுங்கள்' என்கிறார் கென் ராபின்சன். இதற்கு ஏராளமான பிரபலங்களின் வாழ்க்கையிலிருந்து உதாரணங்களை அடுக்கி விளக்குகிறார். "எலிமென்ட்க்குமுன்', "எலிமென்ட்க்குபின்' என்று அவர்களுடைய வெற்றிக்கதைகளில் இந்த விஷயம் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.


0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP