தனிமனித வருமானமும், அன்னியச் செலாவணி இருப்பும் மட்டுமே வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல.

21 September 2011



குடும்பமானாலும் சரி, தேசமானாலும் சரி, மிகப்பெரிய மூலதனமும், அதிகப்படியான ஒதுக்கீடும் வருங்காலத்துக்காக ஒதுக்கப்படுவதுதான் புத்திசாலித்தனம். குறிப்பாக, இளைய தலைமுறையின் வளர்ச்சிக்காகச் செலவழிப்பது என்பது சரியான முதலீடுதானே தவிர செலவு என்று சொல்லலாகாது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சொல்லப் போனால், கூட்டுக் குடும்ப முறை வலுவாக இருந்தது வரை, குழந்தைகள்தான் மிகப்பெரிய பாதுகாப்பு என்று கருதியதுபோய்,  இப்போது குழந்தைகளுக்காகச் செலவழிப்பது தங்களது கடமை என்பதுபோல ஆகிவிட்டது. குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலையில் அமர்த்துவதுடன் தங்களது கடமை முடிந்துவிடுகிறது என்கிற எண்ண ஓட்டம் பெற்றோர் மத்தியில் இருப்பது போலவே, தேசிய அளவில் திட்டமிடும் அரசுகளும், குழந்தைகள் நலனில் செலவிடுவது என்பதை முதன்மையான செலவினமாகக் கருதாமல் இருக்கும் மனப்போக்கு காணப்படுகிறது.
வளர்ச்சி என்பது பங்குச் சந்தையிலோ, அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதிலோ தனிநபர் வருமானம் உயர்வதிலோ இல்லை என்பதை இப்போது, பொருளாதார தாராளமயம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாடுகள் உணர்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டன. இல்லையென்றால், மருத்துவக் காப்பீட்டுக்காக அமெரிக்கா வரலாறு காணாத அளவில் ஒதுக்கீடும் முக்கியத்துவமும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
"ஹக்' என்கிற பெயரில் குழந்தைகளின் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒன்று செயல்படுகிறது. "ஹக்' என்றால் அரபி மொழியில் உரிமை என்று பொருள். இந்த அமைப்பு குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதை மட்டுமல்ல, அவர்களைச் சமுதாயப் பொறுப்புள்ள பிரஜைகளாக மாற்றுவதிலும், நாளைய தலைமுறை தேசத்தை நடத்திச் செல்பவர்களாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து இந்த அமைப்பு நாம் எந்த அளவுக்கு நாளைய தலைமுறை பற்றிக் கவலைப்படுகிறோம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 42 விழுக்காடு குழந்தைகள்தான் என்றாலும், நமது நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டுதோறும் நாம் அவர்களது வளர்ச்சிக்காகவும், வருங்காலத்துக்காகவும் செய்யும் ஒதுக்கீடு வெறும் 4.12%தான்.
அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) போன்ற திட்டங்களின் மூலம் பல கோடி ரூபாய் குழந்தைகள் நலனுக்காகச் செலவிடப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் இதன் பங்கு வெறும் 4.12% மட்டுமே. கல்விக்கான ஒதுக்கீடு என்பது 2.9% சுகாதாரம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி போன்றவை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே அரசின் ஒதுக்கீடு பெறுகின்றன.
இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. நிதிநிலை அறிக்கைகளில் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை மத்திய, மாநில அரசுகளால் முழுமையாகச் செலவிடப்படாமல் இருக்கின்றன என்பதுதான்.  
மத்திய சுங்க, கலால் துறைகள், ஆரம்பக் கல்வி வரி என்கிற பெயரில் ஒரு வரி வசூல் நடத்துகின்றன. இதுமட்டுமல்லாமல் நடுநிலைக் கல்வி வரி வசூலிக்கப்பட்டு (பிராரம்பிக் சிக்ஷா கோஷ்) அதன் மூலம் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  
இப்படித் துணை வரி வசூலிக்கப்படத் தொடங்கியது முதலே, அனைவருக்கும் கல்வி, மதிய உணவு ஆகிய இரண்டு திட்டங்களையும் அரசு "பிராரம்பிக் சிக்ஷா கோஷ்' திட்டத்தின் கீழ் கொண்டு வந்து தனது பொறுப்புகளைக் கை கழுவி விட்டுவிட்டது போலத் தோன்றுகிறது. அதன் பிறகு அரசின் ஒதுக்கீடு கணிசமாக உயரவே இல்லை.
குழந்தைகள் நலன் என்கிற பெயரில் நிதிநிலை அறிக்கைகளில் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்வதால் மட்டும், நாளைய தலைமுறையினரின் நல்வாழ்வு உறுதிப்படுத்தப்படும் என்பதில்லைதான். ஒதுக்கீடுகள் எல்லாமே பயனாளிகளை அடைந்திருக்குமேயானால், இந்தியா எப்போதோ உலக வல்லரசாக மாறியிருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நாம் சொல்லி மனவேதனையை வெளிப்படுத்த வேண்டியதில்லை. ஆனால், நமது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்வதில்கூடத்  தயக்கம் காட்டும் நாம் (அரசு), நல்லதொரு வருங்காலம் இந்த தேசத்துக்கு இருக்கும் என்று என்ன தைரியத்தில் நம்புகிறோம் என்பதுதான் மனதை நெருடும் கேள்வி.
கல்வி என்று எடுத்துக் கொண்டால், நாம் இரண்டு வகையான குழந்தைகளை உருவாக்க முற்பட்டிருக்கிறோம். ஒருபுறம், தாய்மொழிகூடத் தெரியாத, வறுமை என்றால் என்ன என்பதையே அறியாத, வாழ்க்கையில் எல்லா வளங்களையும் அனுபவிக்கும் பணக்காரத்தனமான குழந்தைகள் நகரங்களில் உருவாக்கப்படுகின்றனர். இந்தக் குழந்தைகள்தான் இந்தியாவின் முகமாக நவீன தொழில்நுட்ப சாதனைகளைப் படைத்து நமக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொருபுறம், ஆரம்பக் கல்வியுடன் படிப்பைத் தொடராத, அப்படியே தொடர்ந்தாலும், 30% மட்டுமே கல்லூரிப் படிப்பைத் தொடரும் அவலம். இன்றும் உலகின் 30% ஊட்டச்சத்துக் குறைந்த, 40% ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழும் நாடாக இந்தியா தொடர்கிறது. பள்ளிக்கே போகாத குழந்தைகள் இன்னும்கூட பலர் இந்தியாவில் இருக்கும் அவல நிலை.
நாம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. நிதியமைச்சர் விரும்புவதுபோல 9% பொருளாதார வளர்ச்சியும், அதிகரித்த தனிமனித வருமானமும், அன்னியச் செலாவணி இருப்பும் மட்டுமே ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல. நமது குழந்தைகள்தான் நாளைய இந்தியா. அவர்கள் ஏற்றத்தாழ்வில்லாமல் கல்வியும், சுகாதாரமும், உணவும், உடையும் பெறுவதுதான் உண்மையான முன்னேற்றம்!

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP