ஒவ்வொரு கரன்சி நோட்டிலும் யாரோ ஒரு அப்பாவியின் ரத்தம் தோய்ந்திருக்கிறது

29 September 2011

வாகன விபத்துகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வாகன ஓட்டிகளிடம் ஏற்படும் போட்டி மனப்பான்மை தான். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டால் விபத்துகளை தவிர்க்கலாம்.  வாகனங்களை ஓட்டி பழகும் போதே முறையாக பழகவேண்டும். குறிப்பாக டிரைவிங் ஸ்கூல் வாகனங்களில் (இரட்டை கட்டுப்பாடு அமைப்பு) பழகும் போது, நுட்பங்களை கற்றுக் கொள்ள முடியும். நகர் பகுதியில் 40 கி.மீ., மற்ற இடங்களில் 60 - 80 கி.மீ., வேகத்தில் சென்றால் விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம். கியர்களை வேகத்திற்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் எரிபொருளை சிக்கனப்படுத்தலாம். சிலர் 60 கி.மீ., வேகம் வரை இரண்டாவது கியரில் செல்வார்கள் இது மிகவும் தவறு. நான்கு வழிச்சாலைகளில் செல்லும் போது, விளம்பரப் பலகைகளில் என்ன வேகத்தில் செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மீறக்கூடாது. வாகனங்களை மாறி மாறி ஓட்டுபவர்கள், ஓட்டும் வாகனத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஓட்ட வேண்டும். வாகனங்களை ஓட்டும் போதே மொபைலில் பேசுதல், குடிபோதை, தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை போன்ற காரணங்களால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. அதிவேகம், அதிக பாரம் இருந்தால் வாகனங்களை எளிதாக கட்டுப்படுத்தவே முடியாது. விபத்துகள் ஏற்பட்டும் வாய்ப்பு அதிகம். போட்டி போட்டு வாகனங்களை ஓட்டுவது விபத்தை அழைப்பது போன்றது. எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்துக் கொண்டால் வாகன பயணமும் இனிதாகவே அமையலாம்.

உலகில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. அதிக மக்கள், அதிக வாகனங்கள், அதனால் விபத்தும் அதிகம் என்று பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்தியாவை காட்டிலும்  மக்களும் வாகனங்களும் அதிகமுள்ள சீனாவில் விபத்துகள் குறையும்போது,  இங்கே கிடுகிடுவென அதிகரிக்கிறது என அவர்களுக்கு தெரியாது.

மூன்று நிமிடத்துக்கு ஒருவர் வீதம் இந்தியர்கள் நடுரோட்டில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகள் இந்த நிலை குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்தன. 2007ல் நம் நாட்டில் 2 லட்சம் பேர் பலியானதாகவும், 5 லட்சம் பேர் காயம் அடைந்ததாகவும் உலக நல்வாழ்வு நிறுவனம் அறிக்கை தயாரித்திருந்தது.  

தமிழகத்தில் ஆண்டுக்கு 62 ஆயிரம் விபத்துகளில் 15,000 பேர் பலியாவதாக கணக்கு சொல்லப்படுகிறது. விபத்துகளில் முக்கால்வாசி டிரைவரின் தவறால் நடக்கின்றன. ஓவர்டேக் செய்யும்போது நடக்கும் மோதல்கள் பிரதானம். ஒரு நொடியில் சரியான முடிவு எடுக்க தெரியவில்லை; அல்லது-முடியவில்லை.

தூக்கம், குடிபோதை, அலட்சியம், அறிவின்மை, வேகம், செல்போன் என ஏதோ ஒரு காரணம். விபத்துகளால் நேரும் உயிரிழப்புகள் குறித்து  பலமுறை எச்சரித்த பின்னரும், போக்குவரத்து விதிகளை தயவு தாட்சண்யம் பாராமல்  அமுல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட துறையினர் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

அதிரடி சோதனையில் கையும் களவுமாக அதிகாரிகள் சிக்கிய பின்னரும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் புரோக்கர்களின் நடமாட்டம் ஓயவில்லை; பணப்புழக்கம் குறையவில்லை. லஞ்சமாக வாங்கும் ஒவ்வொரு கரன்சி நோட்டிலும் யாரோ ஒரு அப்பாவியின் ரத்தம் தோய்ந்திருக்கிறது என்று புத்தியில் உறைக்கும் போதுதான் சாலை மரணங்களுக்கு வேகத்தடை போடமுடியும்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP