சுகாதாரத்துறை அலட்சியமும்: பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களும்

30 September 2011


கடமை தவறும் சுகாதாரத்துறையினரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர்கள், மருந்தாளுனர், செவிலியர், கட்டுக்கட்டுபவர், கடைநிலை ஊழியர்கள், களப்பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பகுதி நேர மேற்பார்வையாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது, களப்பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்வது மருத்துவ அலுவலர்களின் பணியாகும். புறநோயாளிக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குதல் மற்றும் மருந்துகளை இருப்பு வைத்தல் போன்றவைகள் மருந்தாளுநர்களின் பணியாகும். அதேபோல் புறநோயாளிகள் பிரிவுக்கு வரும் பொதுமக்களுக்கு ஊசி போடுதல் மற்றும் பிரசவம் பார்ப்பது செவிலியர்களின்
 பணியாகும். ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரித்து வருவது, கடைநிலை ஊழியர்களின் பணியாகும். பிறப்பு, இறப்பு பதிவு, கொள்ளை நோய்த் தடுப்பு, காய்ச்சல் தடுப்பு, மற்றும் சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது, உணவு கலப்பட தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது. பொது சுகாதாரச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதுகாக்கப்பட்ட குடிநீர், உள்ளாட்சி நிர்வாகத்தால் முறையாக மருந்து கலந்து விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தல், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுக்காத்தல் போன்றவை சுகாதார ஆய்வாளர்களின் பணியாகும்.
கர்ப்பிணிப்பெண்கள் குறித்து பதிவு செய்தல், பிரசவம் பார்த்தல், தடுப்பூசி போடுதல், சிறு நோய்களுக்குச் சிகிச்சை அளித்தல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துணைச் சுகாதார நிலையங்களில் தங்கி பணிபுரிதல், பள்ளிக் குழந்தைகள் நலம், மற்றும் கொள்ளை நோய் ஏற்படும்போது உதவியாக இருப்பது கிராம சுகாதார செவிலியரின் பணியாகும்.
 இதுமட்டுமின்றி சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோரது பணிகளை பகுதிநேர மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்நிலையில் இவர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களுக்குச் சென்று முறையாக மேற்கண்ட பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செய்வது கிடையாது என்பது பொதுமக்களின் பொதுவான குற்றச்சாட்டு.
 குறிப்பாக மருத்துவ அலுவலர் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு அரசு அறிவித்துள்ள நேரத்தின்படி பணி செய்வது கிடையாது. மேலும் இவர்கள் பணிக்கு வராததால் மாலை நேரத்தில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படுவதில்லை.
பொதுமக்கள் நலன் கருதி மாவட்டங்களில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)  இருந்தும், இம்மாவட்டத்தில் இயங்கிவரும் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாலை நேர புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படுவதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வது கிடையாது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மருத்துவ அலுவலர்களின் பணிகளை களத்துக்குச் சென்று ஆய்வு செய்தால், மருத்துவ அலுவலர்கள் களத்துக்குச் செல்வார்கள்.  மருத்துவ அலுவலர்கள் களத்துக்குச் சென்றால் களப்பணியாளர்கள் கிராமத்துக்குச் சென்று தங்களது பணிகளை நிறைவாக செய்வார்கள். பொது மக்கள் பயன் பெறுவர். எனவே இனியாவது தங்களது கடமையை உணர்ந்து சுகாதாரத்துறையினர் பணி செய்தால் மக்களின் பிணி நீங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP