தண்ணீர் தேவைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும்

05 November 2011

மழை பெய்தால்தான் தாவரம்முதல் மனிதன் வரை உயிர்வாழ முடியும். நம் உடலும் இரத்தம் என்ற செந்நீரில்தான் இயங்குகிறது. உயிர்களின் பிரதான சக்தியாக நீர் விளங்குகிறது. குடிப்பதற்கும்குளிப்பதற்கும் நீர் அவசியம் தேவை. இந்த புவியானது மூன்றுபங்கு நீரால் சூழப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவையான நீரைப் பற்றி ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் (W.H.O.) தந்துள்ளது.

2025ல் உலகின் முக்கியப் பகுதியான ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்றும், மேலும் நிலத்தடி நீர் சில இடங்களில் கிடைக்காது என்றும், மற்ற இடங்களில் உவர்ப்பு நீர்தான் கிடைக்கும் என்றும் நீருக்காக நாட்டுக்கு நாடு போர் தொடுக்கும் நிலை வரலாம் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் மூன்றில் இரண்டு சதவிகித மக்கள் நோய்களால் அவதிப்படுவார்கள் என்றும் தெரிவிக்கின்றது.

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper 
 நல்ல மழை பெய்த நிலையிலும் அங்குள்ள ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன

 இந்தியாவில் ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மராட்டியம், குஜராத், இராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதியுறும் என்றும் கூறியுள்ளது. ஏன் நீர் இல்லாமல் போகிறது. இந்த நிலை வரக் காரணம் என்ன? இதற்கு தீர்வுதான் என்ன என்பதை கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் மனிதனே முதல்காரணமாகத் தெரிகிறான்.
தற்போதுகூட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சோமாலிய நாட்டில் வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. அங்கு பிறக்கும் குழந்தைகளை பறவைகளும், மிருகங்களும் வேட்டையாடுவதை அண்மையில் நாளிதழ் ஒன்று படமாக வெளியிட்டுள்ளது.

இத்தகைய கொடுமையான நிகழ்வுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கமோ புயல், மழை, பூகம்பம் என்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதன் இனம் அஞ்சி அஞ்சி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இயற்கையின் சீற்றத்திற்கும் மனித இனமே காரணமாகியுள்ளது. 

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஊத்துக்கோட்டை எல்லையில் 916 ஏக்கரில் பெரிய ஏரி கன மழை பெய்தாலும் ஏரியில் நீர் நிரம்பவில்லை.

வற்றாத ஜீவநதிகளும், பொங்கிவரும் ஆறுகளும் நிறைந்த தேசத்தில் குடிநீர் பற்றாக்குறையா என்று நினைக்கத் தோன்றும். ஆண்டுதோறும் மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் இருந்தும் இந்த நிலை உள்ளது. மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் பெருகி வந்ததும், மனித இனம் வாழ காடுகளையும், மரங்களையும் அழித்ததன் விளைவே இது.

மழை நீரை நம் முன்னோர்கள் ஏரி, குளங்களில் தேக்கி வைத்து தங்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத் தேவைக்கும் பயன்படுத்திவந்தனர்.

இன்றுகூட தென்மாவட்டங்களில் ஒவ்வொரு கிராமத்தின் நடுவில் பெரிய குளம் இருக்கும். அதைச் சுற்றி முள்வேலி அமைத்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். இந்த குளத்திற்கு நீர் வரத்து உள்ள வாய்க்கால்கள் கூட சுத்தமாக பராமரிக்கப் பட்டிருக்கும்.

அதுபோல் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது தொழிற்சாலைகளின் கழிவு நீரால் கிணற்று நீர், ஊற்றுநீர், ஆற்று நீரும் மாசடைந்துள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். மாநகரங்களில் குளோரின் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் சுத்தமான குடிநீர் என்று கூறமுடியாது.

மக்களைத் தாக்கும் நோய்களில் நீரினால் பரவும் நோய்கள் 62% ஆக உள்ளது. நல்ல சுத்தமான சுகாதாரமான நீரே ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகிறது.

ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குளிர்பான கம்பெனிகள், தொழிற்கூடங்கள் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி வறட்சியடையச் செய்துவிட்டன. ஆற்றுநீர் அனைத்தும் சாக்கடை நீராக மாறி குடிநீருக்கு பயன்படாமல் போய்விட்டது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் எந்த அளவுக்கு நிவர்த்தி செய்யும் என்று புரியவில்லை. தற்போது உள்ள நிலை நீடித்தால் 2025க்கு பின் குடிநீருக்காக ஆயுதம் ஏந்தி போராடும் நிலை நிச்சயம் உருவாகலாம். தற்போது பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையில் உள்ள நீர் எந்த அளவுக்கு சுகாதாரமாக உள்ளது என்பதை ஆராய்ந்தோமானால் அதிலும் தோல்விதான் மிஞ்சும்.

இந்த நிலையை மாற்ற மனிதர்களாகிய நம்மால்தான் முடியும். ஏரி குளங்களை ஆக்கிரமிக்காமல் அவற்றை சீராக தூர்வாரி மழைக்காலங்களில் கடலில் கலந்து உதவாமல் போகின்ற நீரை தேக்கி வைக்க வேண்டும்.

அரசின் அறிவுரைப்படி வீட்டின் சுற்றுப்புறங்களில் சிமெண்ட் தளம் அமைக்காமல் புல்தரைகளை அமைக்கவேண்டும். வீட்டிற்கு வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழை நீரை சேகரிக்க வேண்டும்.

(
குறிப்பு - 2002-ல் அரசின் கடுமையான உத்தரவால் சென்னை போன்ற பெரு நகரங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டம் செயல் படுத்தப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது)

விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி

என்ற வாசகத்திற்கு ஏற்ப மழைநீரை உயிர் நீராக நினைத்து சேகரித்து எதிர்கால சந்ததியினருக்கு குடிநீர் கிடைக்கச் செய்வோம். ஏரி, குளங்களை சீர் செய்தும், ஆற்று நீரில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலக்காமலும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இப்போதே குடிநீரின் தேவை பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே குடிநீர் என்னும் உயிர் நீர் பாதுகாக்கப்படுவதோடு, எதிர்கால தலைமுறைக்கும் உதவும். அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று கருதாமல் ஒவ்வொருவரும் நீர் சேகரிப்பில் ஆர்வம் கொண்டு செயல்பட்டால்தான் குடிநீர் பற்றாக் குறையிலிருந்து விடுபட முடியும்.


ஆறுகளிலும், நீர்நிலைகளிலும் சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பதும், ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தந்த ஆறுகளின் பழைய நிலைமையை மீண்டெடுக்கவும், ஆறுகளில் தொடர்ந்து நீரோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் உடனடியாக முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.


பழைய வரைபடத்தை வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பாளர் யாராக இருந்தாலும் அகற்றப்பட உதவும் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். கடல்நீர் சுத்திகரிப்பு என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே தவிர, அதற்காகும் செலவையும், முதலீட்டையும் வைத்துப் பார்க்கும்போது, அணுமின் சக்திபோல இதுவும் இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்காது. அதற்குப் பதிலாக, கழிவுநீரைச் சாக்கடை மூலம் ஆறுகள் வழியாகக் கடலில் கலக்கவிடாமல், அதையே சுத்தப்படுத்தி குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்குப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம்.


இந்த விஷயத்தில், ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், வலைகுடா நாடுகள் போன்ற நாடுகள் முன்னோடிகளாக இருக்கின்றன. ஹைதராபாத் நகரின் ஹுசைன்சாகர் ஏரியைப் பாதுகாக்க சுமார் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் அந்த ஏரியில் தினமும் விடப்படுகிறது. இந்தியாவைப்போல மிக அதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டில் நாளும் பெருகிவரும் தண்ணீர் தேவைதான் ஒரு மிகப்பெரிய சவாலாக அடுத்த சில ஆண்டுகளில் நம்மை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போதே நாம் திட்டமிடாமல் போனால், இந்தியா ஒரு பாலைவனமாகும் ஆபத்து இருக்கிறது. எப்படி கவலைப்படாமல் இருப்பது?



0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP