பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

07 November 2011


பல் போனால் சொல் போகும்' என்ற பழமொழி நமது பல்லின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அப்படிப்பட்ட பற்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையாகப் பராமரித்தால் முதுமைப் பருவம் வரை ஆரோக்கியமான பற்களுடன் இருக்கலாம்.எனவே பற்களை பாதுகாக்கும் வழிமுறைகளைச் சொல்கிறார்  சென்னை தி.நகரை சேர்ந்த பிரபல பல் ஈறு நோய் சிகிச்சை நிபுணர்   டாக்டர் பிரியாபிரபாகர். அவர் மேலும் கூறியதாவது:-

பற்களுக்கு இடையே  கறை மற்றும் உணவுத் துகள்கள் தேங்குவதால் அவை பற்களையும் அதன் ஈறுகளையும் பாதிக்கும்.இதனால் பெரியோடான்டைசிஸ் எனும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.பற்கறையிலுள்ள பாக்டீரியாக்கள்தான் அந்த நோய் ஏற்பட முக்கிய காரணமாகும்.

இந்த பாக்டீரியாக்கள் ஈறு நோய் உண்டாக்குவது மட்டுமின்றி ரத்த குழாய்கள் மூலம் உடலின் பிற உறுப்புகளுக்கு சென்று இதய நோய், மகப்பேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். கர்ப்பிணி பெண்களை ஈறு நோய் தாக்கினால் குறை பிரசவம்,மற்றும் குழந்தை சராசரி எடையான 2.5 கிலோவிற்கு குறைவாக பிறப்பதற்கு  வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே கர்ப்பிணி பெண்கள் பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்வது நல்லது. மேலும் கர்ப்ப காலத்தின் போது ஈஸ்ட்ரோஜன் மிக அதிகமாக சுரப்பதால் ஈறு வீக்கம் மற்றும் ஈறிலிருந்து ரத்த கசிவு ஏற்படும்.பற்களும் ஈறும் ஆரோக்கியமாக இருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

அறிகுறிகள்.........

1.பல் ஈறு தடித்து பெரிதாக இருக்கும்.

2.ரத்த கசிவு இருக்கும்

3.சீழ் கசிவும் வாய் துர்நாற்றமும் இருக்கும்.

4.பற்கள் தங்கள் வலிமையை இழந்து ஆட்டம் காணும்.

5.பெரும்பாலானோருக்கு  வலி அதிகம் இல்லாததால் இந்த நோய் முதிர்ந்த நிலையில் தான் உணரமுடிகிறது.

எனவே ஆண்டுக்கு ஒரு முறை  பல் மருத்துவரை சந்தித்து பரிசோனை செய்து கொண்டால் பல் ஈறு நோய் உண்டாவதை தடுக்கலாம்.

நவீன சிகிச்சை முறைகள்.........

பற்களுக்கு இடையில் படியும் பல் கறை  மற்றும் வெற்றிலை பாக்கு, புகை பிடித்தல், போன்றவற்றால் படியும் பல் கறையையும் அல்ட்ராசானிக் ஸ்கேலர் என்ற நவீíன கருவியைப் பயன்படுத்தி எனாமல் பகுதியை பாதிக்காமல் பற்களை சுத்தம் செய்து விடலாம். ஈறுகள் மிகவும் பாதிப்படைந்து இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படும். இது மிகவும் எளிய முறை சிகிச்சையாகும்.

இதனை மேற்கொள்வதால் ஈறு மேலும் பாதிப்படையாமல் காப்பாற்றி விடலாம். பற்களையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சையினை இதற்கென தேர்ச்சி பெற்ற ஈறு சிகிச்சை நிபுணரிடம் செய்து கொள்வது மிகவும் நல்லது.சமீபகாலமாக இந்த சிகிச்சையை அதி நவீன கருவியான லேசர் மூலம் ரத்தமும் வலியுமின்றி மேற்கொள்ளலாம்.      

பற்களை பாதுகாக்க யோசனைகள்.........

தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். பல் துலக்கும் போது பற்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. ஈறுகள் நாக்கு ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும்.பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

பழங்கள், பச்சைக் காய்கறிகளால் செய்யப்பட்ட சாலட் உணவையும் புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உண்ணலாம். சாப்பிட்டு முடித்தவுடன் பற்களை சுத்தம் செய்து விடுங்கள். இது பற்கள் பாதுகாப்புக்கு மிக அவசியம். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது நல்லது. இதனால் பற்கள் சுத்தமாவதுடன் ஈறுகளுக்கும் இதமாக இருக்கும்.

உணவு வேளையில் நீங்கள் உண்ண வேண்டிய கடைசிப்பொருள் நறுக்கப்பட்ட பச்சைக்காய்கறிகளாகவோ அல்லது பழங்களாகவோ இருக்கட்டும். மறந்தும் கூட இனிப்பு பொருட்களை சாப்பிட வேண்டாம். சாப்பிடும் போது ருசியாக இருக்கும் உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்றாற்றத்திற்கு காரணமாக அமைகிறது.

அதனால் சாப்பிட்டவுடன் பல் தேய்ப்பது நல்லது. இது பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை சுத்தம் செய்யும். வாயை நன்றாக கொப்பளிப்பதன் மூலம் பற்களின் இடையே உள்ள உணவு கூறுகளை சுத்தம் செய்ய முடியும். உணவு உண்ட பின் வாய் கொப்பளிக்க வேண்டும். பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

சரிவிகித சத்துணவை சாப்பிட வேண்டும். சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் கலந்த உணவை உண்ணும் ஒவ்வொரு முறையும் இருபது நிமிடங் களுக்குப் பிறகு அமிலங்கள் உற்பத்தியாகி பற்களை தாக்கு கின்றன. எனவே தினந்தோறும் உண்ணும் நொறுக்குத் தீனியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம்.

அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் முடிந்த வரை சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும். மூக்டைப்பு, சளி இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம்.

நறுமண மென்தால் மாத்திரைகள் இதற்கு உதவும். இவற்றை எல்லாம் செய்த பிறகும் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும் என்கிறார் சென்னை தி.நகர் டூத் ஹெல்ப்லைன் பல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரியாபிரபாகர்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP