மக்களின் கோபத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகும் ஆள்வோர்

25 November 2011

Clcick - முஸ்லீம் பெண்களை ஏமாற்றுவது ஏன்
இந்த ஆண்டின் தொடக்கம் முதலாகவே, கார், இரு சக்கர வாகனங்கள் விற்பனை சென்ற ஆண்டைக் காட்டிலும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த விற்பனை 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகம்.
இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் வாகனக் கட்டணம் உயர்வதுதான். ஆனால், இந்தியாவில் சரக்கு வாகனங்களின் விற்பனை மிகக் குறைவாக இருக்கிறது. கார்கள், இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக அதிகமாக இருக்கிறது. சரக்கு வாகனங்களால் செலவாகும் பெட்ரோலியப் பொருள்களைவிட, மிக அதிகமாக பெட்ரோல் டீசல் கார்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும்தான் பெட்ரோலியப் பொருள்கள் செலவாகின்றன.
இந்தியாவில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நகரச் சாலைகளின் 41 விழுக்காட்டை கார், பைக் நிறுத்துமிடம் ஆக்கிரமித்துக் கொள்கிறது எனத் தெரியவந்துள்ளது. நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த வீட்டுக்குள் இடமில்லாததால் தெருவை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. பெருநகரங்களில் வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது வீணாகும் பெட்ரோல் அளவு, தில்லியில் மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் என்று மதிப்பிடப்படுகிறது. இதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒருசேர இழப்புதான்.
சீனாவில், ஷாங்காய் நகரில் ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கார் உரிமம் (லைசென்ஸ் பிளேட்) ஏலம் விடப்படுகிறது. ஒரு கார் லைசென்ஸ்பெற  குறைந்தது ரூ.2.75 லட்சம் ஆகிறது. அதாவது, ஒரு காரின் விலை! ஆகவே, கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து, சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
ஷாங்காய் நகரில் சைக்கிள் ஓட்டுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு அரசே சில நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் சைக்கிள்கள் நூற்றுக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கான அடையாள அட்டையைக் கணினியில் தேய்த்துவிட்டு சைக்கிள்களை எடுத்துச்சென்று, தங்கள் பணிமுடிந்தவுடன், வேறு ரயில்நிலையமாக இருந்தாலும்கூட, அங்கே நிறுத்திவிட்டுச் சென்றுவிடலாம்.
இப்போது இந்தியாவில் புனே நகரம் (ஒரு காலத்தில் சைக்கிள் நகரம் என்ற பெயர் பெற்ற ஊர்) தற்போதைய வாகன நெரிசலைத் தாங்கமுடியாமல், மீண்டும் தனது பழம்பெருமையை நிலைநாட்டும் நடவடிக்கையாக, 20,000 சைக்கிள்களை சாலைகளில் இறக்கிவிட்டு, குறைந்த வாடகையில் மக்கள் பயன்படுத்தும்படி ஏற்பாடுகள் செய்து வருகிறது. சிங்கப்பூரிலும் சீனாவில் இருப்பது போல கார் உரிமம் பெறக் கட்டணம் உண்டு. அந்த நகரின் முக்கிய வீதிகளில் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய மிக அதிகமான சுங்கக் கட்டணம் வீதிக்கு வீதி வசூலிக்கப்படுகிறது. மிகக் குறைந்த பயணக் கட்டணத்தில் எல்லா வசதிகளுடனும் கூடிய பொதுப் போக்குவரத்து உலகின் பல நாடுகளிலும் இயக்கப்படுவது தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத்தான்.
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் கூட கோட்டும் சூட்டும் அணிந்து சைக்கிளில் பயணிப்பவர்கள் பலர். அதை ஒருவரும் கெüரவக் குறைவாகக் கருதுவதில்லை. அதற்குச் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையில் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்கிற பொறுப்பும்தான் காரணம்.
 பல நாடுகள் பெட்ரோலிய சிக்கனத்தைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மக்களின் மோட்டார் வாகன மோகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அரசு சார்பில் போதுமான அளவு பொதுப் போக்குவரத்தை குறைந்த கட்டணத்தில் இயக்குகிறார்கள். நாமோ அதைப் பின்பற்றாமல் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.

தரமான பேருந்துகள் கிடையாது. முறையாக எல்லா பகுதிகளையும் இணைக்கும் "மெட்ரோ' வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் அதிகமான கட்டணம். சொகுசுப் பேருந்து, விரைவுப் பேருந்து என்று காரணம் கூறி கட்டணங்களை உயர்த்தி, போக்குவரத்துத் துறை மக்களின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறதே தவிர பொதுமக்களின் நலனுக்காக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. தொலைதூரப் பயணத்துக்கான விரைவுப் பேருந்துகளும் தரமற்றவையாக இயக்கப்பட்டு மறைமுகமாக தனியார் "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கு உதவி செய்வதில்தான் கருத்தாய் இருக்கின்றன.
முறையான பொதுப் போக்குவரத்து இல்லாமை ஒரு குறை என்றால், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறோம் என்ற பெயரில், வங்கிக் கடன்களை வாரி வழங்கி தனியார் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்குத் துணைபோவது அரசின் இன்னொரு மாபெரும் மோசடி. நடுத்தர வர்க்கத்தினரைக் கடன்காரர்களாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்திருப்பதுதான் மிச்சம். மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதால் யாருக்கு லாபம்? கடன் கொடுத்த தனியார் வங்கிகளுக்கும் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தானே தவிர, பெட்ரோலியப் பொருள்களுக்கு அந்நிய செலாவணியை விரயமாக்கும் அரசுக்கோ, வாங்கும் சம்பளத்தில் கணிசமான பகுதியை வட்டியாகவும் தவணையாகவும் பெட்ரோலுக்காகவும் செலவிடும் பொதுமக்களுக்கோ என்ன லாபம்?
இனியும்கூட, கார்கள், இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டாமா? கார்கள் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களுக்கு நிபந்தனைகளையும், அவர்களுக்கான பெட்ரோல் விலையையும் கூடுதலாக நிர்ணயிக்க வேண்டாமா? வரம்பில்லாமல் வாகனங்களுக்குக் கடன் வழங்குவது தடுக்கப்பட வேண்டாமா? எல்லாவற்றுக்கும் மேலாக, நஷ்டமானாலும் பரவாயில்லை என்று பொதுப் போக்குவரத்துத் துறையில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் வாகனங்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட வேண்டாமா?

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP