கறவை மாடு வைத்திருப்பவரே தீவனப் பயிர் வளர்க்கலாம்

17 November 2011


தமிழகத்தில் பால் தேவை எப்போதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதையை பால் உற்பத்தி, நமது தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதாக இல்லை.
பால் தட்டுப்பாடுதான் பல்வேறு கலப்படங்களுக்கும், விலையேற்றத்துக்கும் மூலகாரணம். எனவே பால் உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் கலப்படமற்ற, சுத்தமான பாலை நியாயமான விலையில் பெறமுடியும்.
பால் உற்பத்தியைப் பெருக்க தமிழகத்தில் இன்னமும் நிறைய கறவை மாடுகள் வளர்க்கப்பட வேண்டும். நிறைய மாட்டுப் பண்ணைகள் உருவாக வேண்டும். எனவே தான் தமிழக அரசு மாடு வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இலவசமாகவும் மானியத்திலும் கறவைமாடுகள் வழங்கப்படுகின்றன. மாடுகள் அதிக அளவில் வளர்க்க மேய்ச்சல் நிலம் தேவை. ஆனால் மேய்ச்சல் நிலங்கள் எல்லாம் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இதனால் மாடுகளுக்கான தீவனப் புல் கிடைப்பதில் பெருமளவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கறவை மாடுகளுக்கு கால் பங்கு வைக்கோல், அரைப் பங்கு பசுந் தீவனம், கால் பங்கு கடைகளில் கிடைக்கும் ஏனைய தீவனங்கள் கொடுத்தால் மாடுகள் ஆரோக்கியமாகவும், நிறைய பாலும் கறக்கும். பராமரிப்புச் செலவும் குறையும் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே பால் உற்பத்தியில் தீவனப் பயிர்களின் பங்கு பெரிதும் அங்கம் வகிக்கிறது. 5 மாடுகளுக்கு மேல் வைத்து இருப்பவர்கள் நிச்சயம் தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். அல்லது விலைகொடுத்து வாங்கவேண்டும் என்கிறது கால்நடை பராமரிப்புத்துறை.
வீட்டுக்கு 2 மாடுகள் வைத்திருக்கும் ஐவர் சேர்ந்து, தீவனப் பயிர்களை விளைவிக்கலாம். தீவனப் பயிர்கள் வளர்க்க, கால்நடை பராமரிப்புத் துறை நிறைய மானியம் வழங்குகிறது.
தீவனப்பயிர்கள்: தீவனப் பயிர்களில் முக்கியமானவை தீவன மக்காச் சோளம், தீவனச் சோளம், தீவனக் கம்பு, கினியா புல், தீவன தட்டைப் பயறு, கம்பு நேப்பியர் புல் ஆகியவை.
தீவன மக்காச் சோளத்தில் ஆப்பிரிக்கன் உயரம், டெக்கான், கங்கா, கோ1 என்ற ரகங்கள் உள்ளன. இவற்றுக்கு உரத்தேவை ஹெக்டேருக்கு 40 கிலோ யூரியா, 64 கிலோ சூப்பர் பாஸ்பேட், 16 கிலோ பொட்டாஷ். ஹெக்டேருக்கு 16 கிலோ விதை தேவை. விதைத்த 3-ம் நாள் தண்ணீர், பின்னர் வாரம் ஒரு முறை நீர்பாய்ச்சினால் போதும். 60-வது நாள் முதல் பூக்கும் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
தீவனச் சோளம் கோ 11, கோ 27 என்ற ரகங்கள் கிடைக்கின்றன. இவற்றுக்கு ஹெக்டேருக்கு 12 கிலோ யூரியா, 16 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 30-வது நாளில் 12 கிலோ யூரியா இட வேண்டும். விதைத் தேவை ஹெக்டேருக்கு 16 கிலோ. விதைத்த உடன் முதல் தண்ணீரும், 3-ம் நாளில் 2-வது தண்ணீர், பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 60 முதல் 65 நாளில் அறுவடை செய்யலாம்.
தீவனக் கம்பு: தீவனக் கம்பு கோ 8 என்ற ரகம் கிடைக்கிறது. இதற்கு ஹெக்டேருக்கு அடியுரமாக 12 கிலோ யூரியா, 96 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ பொட்டாஷ், மேலுரமாக 21 கிலோ யூரியா இட வேண்டும். விதை அளவு ஏக்கருக்கு 4 கிலோ. 10 முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். 40 முதல 45 நாள்களில் அறுவடை செய்யலாம்.
கினியா புல்: ஏக்கருக்கு 20:20:60 கிலோ முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்களும், மேலுரமாக 10 கிலோ தழைச்சத்தும் இட வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவை. வேர்க் கரணை ஏக்கருக்கு 20,640. விதைத்த உடன் முதல் தண்ணீர் 3-ம் நாளும், பின்னர் 15 முதல் 20 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்யலாம்.
தீவன தட்டைப்பயறு: இதில் கோ 5 ரகம் கிடைக்கிறது. உரத்தேவை ஏக்கருக்கு அடியுரம் 10:16:8 முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். ஏக்கருக்கு 14 கிலோ போதுமானது. விதைத்து 3-வது நாளில் முதல் தண்ணீரும், பின்னர் 10 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சினால் போதும். 50 முதல் 55 நாளில் அறுடைக்கு வரும்.
கம்பு நேப்பியர் புல்: என்.பி.21, என்.பி.2, கோ1, கோ2, கோ3 ஆகிய ரகங்கள் கிடைக்கின்றன. விதைக் கரணைகள் ஏக்கருக்கு 16 ஆயிரம் தேவை. அடியுரமாக ஏக்கருக்கு 20:20:16 கிலோ விகிதத்தில் முறையே தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இடவேண்டும். முதல் தண்ணீர் நடும் போதும், 2-வது தண்ணீர் நட்ட 3-வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்சினால் போதும். முதல் அறுவடை 80 நாள்களிலும், பின்னர் 45 நாள்களுக்கு ஒரு முறையும் செய்யலாம்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP