சாலை விபத்துகள் அதிகரிக்க காரணம் என்ன?

19 November 2011

உலக அளவில் நாம் பிற நாடுகளை விட எதிலாவது விஞ்ச வேண்டாமா?  பின்தங்கிய நாடு என்று எத்தனை நாளைக்குத்தான் இருப்பது? எனவே நமது நாட்டினர் விஞ்சிவிட்டார்கள். எதில் என்கிறீர்களா? சாலை விபத்துகளில்தான்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டது. அந்த ஆண்டில் தெற்காசிய நாடுகளில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்து 768 பேர். அதில் இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரத்து 800 பேர் என்று அது கூறியது. அதாவது 73 சதவீதம் சாலை விபத்துகள் இந்தியாவில்தான் நடக்கின்றன.


இந்த விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் படும்பாட்டை விவரிக்கவே முடியாது. விபத்துகளில் பாதிக்கப்பட்டு முடமாகிப் போகிறவர்களின், அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கை இன்னும் துயரமானது.

தனது 18 வயதுப் பையனுக்குக் கார் வாங்கிக் கொடுத்து ஓட்டச் சொல்லி அழகு பார்க்கும், பெருமைப்படும் பெற்றோர்கள் இருக்கும் வரை சாலை விபத்துகள் அதிகரிக்கத்தான் செய்யும்.  
சாலை விபத்துகளில் பலியாகிறவர்களின் நிலையை நினைத்துப் பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. சமீர் ஆனந்த்  என்பவர் மிகத் திறமையான ஐஐடி மாணவர். அவருக்கு வெளிநாட்டில் மிக  அதிகமான சம்பளத்தில் வேலைகள் கிடைத்தன. ஆனால் நமது நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் வேண்டும் என்பதற்காகவே அந்த வேலைகளுக்கெல்லாம் அவர் போகவில்லை. அவர் தனது இளம் வயதிலிருந்தே பலமுறை இரத்ததானம் செய்திருக்கிறார். மக்களுக்கு நிறையச் சேவைகள் செய்து வந்தார். அவர் ஒருநாள் சாலை விபத்தில் இறந்துவிட்டார். எல்லாம் ஒரு நொடியில் நின்று போனது. ஒரு அவசரக்காரர் நிதானமாக வாகனத்தை ஓட்டாததால் அவர் உயிரிழந்தார். இது எனது மனதில் மிக அதிகமான, ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.   சாலை பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முழுமூச்சாக அனைவரும் ஈடுபட வேண்டும்.  
சாலை விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு நாம் செய்ய வேண்டியது சாலையில் 360 டிகிரி விழிப்போடு இருக்க வேண்டும்.   சாலைப் பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த   குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குச் சாலையில் பாதுகாப்பாகச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.
சாலையில் வாகன ஓட்டி ஒருவர் செய்யும் சிறு தவறினால்  எவ்வளவோ பேர் பலியாகிறார்கள். யாரோ ஒருவர் பலியானால் கூட அந்தக் குடும்பமே நாசமாகிப் போய்விடும். இதை மனதில் பதியும்படி சொல்லித் தரவேண்டும். அடிபட்டால் உயிர்போய்விடும். உன் பெற்றோர் உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள்?  உன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியம் அல்லவா?  நீ சாலையில் பாதுகாப்பாகச் செல்ல உன்னைத் தயார்ப்படுத்திக் கொள் என்று சொல்ல வேண்டும்.  நேருக்கு நேர் விபத்து ஏன் ஏற்படுகிறது? என்று பள்ளி மாணவர்களிடம் கேட்போம். அவர்கள் பலவிதமாக யோசித்துப் பதில் சொல்வார்கள். இது அவர்களுடைய சிந்தனையைத் தூண்டி விடுவதற்கான முயற்சி. சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முதலில் அறிவுநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் பின்பு மனநிலை மாற்றத்தை ஏற்படுத்துவதுதான்.  ""வாகன ஓட்டிகள் வேகமாகச் செல்லாமல் நிதானமாகச் சென்றாலே சாலை விபத்துகள் நடப்பதை தவிர்க்கலாம்.
நிதானமாகச் சென்றால் மட்டும் போதாது. சிக்னலைப் பற்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு நன்றாகத் தெரிந்து இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக வாகனம் வைத்திருப்பவர்கள் கூட சிக்னலைப் பற்றியே தெரியாமல் இருப்பதுதான் கொடுமை. உதாரணமாக, சிக்னலில் மஞ்சள் விளக்கு எரியும். உடனே வாகனத்தை ஓட்டுபவர், அடுத்து சிவப்பு விளக்கு வந்துவிடும் என்று வாகனத்தை மிக வேகமாக ஓட்டுவார். ஆனால் மஞ்சள் விளக்கு எரிந்தால் வாகனத்தை மெதுவாக நிறுத்த வேண்டும் என்று பொருள். பச்சை விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மஞ்சள் வந்துவிட்டது என்றால், உடனே வண்டியைத் தொடர்ந்து இயக்கக் கூடாது. ஆக்ஸிலேட்டரில் இருந்து காலை எடுத்துவிட வேண்டும்.
 மஞ்சள் விளக்கு அணைந்து அணைந்து எரிந்தால் மெதுவாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று அர்த்தம். இன்றைய வாகன ஓட்டிகளிடம் இதைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். நிறையப் பேருக்குத் தெரியாது. அவர்கள் மஞ்சள் விளக்கைப் பச்சை விளக்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

அதுபோல சிவப்பு விளக்கு அணைந்து அணைந்து எரிந்தால் வண்டியை நிறுத்தி பிற வாகனங்கள் வருகின்றனவா என்று பார்த்துவிட்டுப் போக வேண்டும். பச்சை விளக்கு இல்லாத தருணங்களில் சாலையில் வாகனத்தை ஓட்டவே கூடாது. நிறையப் பேர் சிக்னலைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எப்படியாவது தனக்கு முன்னால் இருக்கும் வாகனங்களை முந்திக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால்தான் நிறையச் சாலை விபத்துகள் நமதுநாட்டில் நடக்கின்றன.''
""சாலைகள் படுமோசமாக,குண்டும் குழியுமாக இருப்பதாலும் விபத்துகள் நடக்குமா ?  நமதுநாட்டில் நடக்கும் விபத்துகளைக் கவனித்துப் பார்த்தால் படுமோசமான சாலைகளினால் நடைபெறும் சாலை விபத்துகள்  10 சதவீதத்திற்கும் குறைவுதான். நமது கவனக்குறைவு, சாலை விதிகளை மதிக்காமை போன்றவைதான் பெரும்பாலான சாலை விபத்துகளுக்குக் காரணம். சாலை விதிகள் தெரியாமல் இருப்பது முக்கியமான காரணம். உதாரணமாக சாலையின் நடுவில் கோடு போட்டிருப்பார்கள். அந்தக் கோடு சில இடங்களில் தொடர்கோடாக இருக்கும். சில இடங்களில் விட்டு விட்டுப் போட்டிருப்பார்கள். வாகன ஓட்டிகளை இது எதற்காக என்று கேட்டுப் பாருங்கள். தெரியாது என்று சொல்வார்கள். தொடர் கோடு இருந்தால் வலது பக்கம் போகக் கூடாது. இடது பக்கமாகவே போக வேண்டும். சாலையின் நடுவில் உள்ள கோடு விட்டு விட்டுப் போடப்பட்டிருந்தால் - துண்டிக்கப்பட்ட கோடாக இருந்தால் } வலது பக்கமாகப் போகலாம். ""இருசக்கர வாகனத்தில் செல்பவர்களில் பலர் ஹெல்மெட் போடுவதைச் சிரமமாகக் கருதுகிறார்களே?'' ஏன்?
நம்மில் பலருக்கு நிறையச் சோம்பேறித்தனம். அதனால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று தெரிந்தாலும் தொடர்ந்து சோம்பேறித்தனத்தை விடாமல் கடைப்பிடிப்பார்கள். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களிடம் ஹெல்மெட் இருக்கும். இருந்தாலும் அதைத் தலையில் போடமாட்டார்கள். காரில் செல்கிறவர்கள், காரில் உள்ள  சீட் பெல்ட்டை போட்டுக் கொண்டால் எவ்வளவு பாதுகாப்பு என்று யோசிக்கமாட்டார்கள். சாலைகளில் ஆயில் வழிந்திருக்கும். அந்த இடத்தில் போகும் போது மெதுவாகப் போக வேண்டும். ஆனால் வேகமாகப் போய்க் கீழே விழுவார்கள். வேகமாகப் போகும்போது எந்த இடத்தில் பிரேக் போட்டால் வண்டி எந்த இடத்தில் போய் நிற்கும் என்பதை யோசிக்காமல் திடீரெனப் பிரேக் போடுவார்கள். சாலை ஈரப்பதமாக இருந்தால் பிரேக் போடும்போது உடனே வண்டி நிற்காது. சாலைவிதிகளைப் பற்றி அறியாமல் இருப்பதும், உதாசீனமாக இருப்பதும்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம்கவனமில்லாமல் வாகனம் ஓட்டினால் பிறர் பாதிக்கப்படுவார்களே என்ற பொறுப்பின்மையும், சமூக அக்கறையின்மையும் விபத்துகளுக்குக் காரணமில்லையா?''  ""சமூக அக்கறையின்மை என்றால்  ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது. தன் சட்டைக்குத் தீப்பிடிக்கும்வரை இங்கே எவனுக்கும் சமுதாய அக்கறை இல்லை என்ற கவிதைதான் அது. நமக்குச் சமுதாய அக்கறை குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் நம்முடைய நாடு உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது'

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP